நாட்டிற்கு வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உ்ளளது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பூர்வீக கிராமமான பரெளன்க்.
இந்த கிராமத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப அரசியல் செய்யம் கட்சிகள் தனக்கு எதிராக கொந்தளிப்பதாகக் குறிப்பிட்டார். எந்த ஒரு தனிப்பட்ட நபருடனும் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்த நரேந்திர மோடி, நாட்டில் வலிமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். ஆனால், எதிர்க்கட்சிகள் குடும்ப கட்சிகளாக இல்லாமல் இருந்து நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அப்போது மட்டுமே, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
குடும்ப ஆதிக்கம், திறமையானவர்களை அரசியலில் இருந்து மட்டுமல்லாமல், அனைத்து துறைகளில் இருந்தும் ஓரம் கட்டிவிடுவதாக நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சிறு கிராமத்தில் வாழும் ஏழை பெற்றோரின் குழந்தைகள்கூட நாட்டின் பிரதமராகவோ குடியரசுத் தலைவராகவோ வருவது அவசியம் என தெரிவித்த நரேந்திர மோடி, இதற்கு குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.









