தவறுக்கு மேல் தவறு – குற்றவாளியை சுட்டு கொன்ற அதிகாரிகள்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் சிறைப்பேருந்தின் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி ஒருவர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று விட்டு அவர்களிடம் இருந்து டிரக் வாகனத்தை எடுத்து தப்பித்த போது…

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் சிறைப்பேருந்தின் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி ஒருவர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று விட்டு அவர்களிடம் இருந்து டிரக் வாகனத்தை எடுத்து தப்பித்த போது அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

 

கடந்த 2006 ஆம் ஆண்டு டெக்சாஸ்-மெக்சிகோ எல்லையில் ஒரு நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக கோன்சாலோ லோபஸ் (வயது 46) என்ற குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்நிலையில், சிறைக்கைதியாக இருந்த அவர், டெக்சாஸின் ஜோர்டான்டன், சான் அன்டோனியோவிற்கு தெற்கே 35 மைல்கள் (55 கிமீ) தொலைவில் கொல்லப்பட்டதாக டெக்சாஸ் குற்றவியல் நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜேசன் கிளார்க் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் செய்த தவறு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

 

கோன்சாலோ லோபஸ், கடந்த மாதம் 12-ம் தேதி டெக்சாஸ் சிறையில் இருந்து சிறைப்பேருந்து மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பாதி தூரம் சென்றதும், சிறைப்பேருந்தின் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்து ஒரு மரத்தில் மோதி நின்றது. பின்னர் லோபஸ் சிறை பேருந்தின் ஓட்டுநரை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து, தன் கை, கால்களில் கட்டப்பட்டிருந்து விளங்குகளை அவிழ்த்து விட்டு பேருந்தின் கூண்டு சன்னல்களை அறுத்தெறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிய வந்த பிறகு லோபசை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்டர்வில்லின் மேற்கே உள்ள டெக்சாஸில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்ம மான முறையில் இறந்து கிடந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த குடும்பத்தினர் பயன்படுத்திய டிரக் வாகனம் திருடு போயிருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளி யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 5 பேரை கொன்றது பழைய குற்றவாளியான கோன்சாலோ லோபஸ் தான் என்பது தெரியவந்தது.

 

இதனால், அவரால் வெகுதூரம் தப்பி ஓடிருக்க முடியாது என்று கருதிய அதிகாரிகள், லோபசை பிடிக்க திட்டம் தீட்டினர். அப்போது, டெக்சாஸின் ஜோர்டான்டன், சான் அன்டோனியோவிற்கு தெற்கே 35 மைல்கள் (55 கிமீ) தொலைவில் அவர் சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் லோபசை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தகவலை டெக்சாஸ் குற்றவியல் நீதித்துறையின் செய்தி தொடர்பாளர் ஜேசன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

 

சிறைபேருந்தின் ஓட்டுநரை தாக்கி தப்பி ஓடியதோடு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று அவர்களிடம் இருந்து வாகனத்தை திருடி சென்ற பழைய குற்றவாளியை அதிகாரிகள் சுட்டு கொன்றது, குற்றங்கள் அதிகரிக்கும் பொருட்டு அதற்கு தீர்வு துப்பாக்கியால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.