ஏழைகளை மேம்பாடு அடையச் செய்வதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்து வரும் 30ம் தேதியோடு 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இதை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த 8 ஆண்டுகளாக நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றியுள்ளதாகக் கூறினார்.
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை முன்னேற்றமடையச் செய்யவும், சமூக நீதியையும் சமூக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும், நாடு முழுவதும் சமமான வளர்ச்சி ஏற்படவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 8 ஆண்டுகளில் சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தரப் பிரிவினரின் விருப்பங்களை அரசு நிறைவேற்றி உள்ளதாகவும், இதேபோல், பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் அவர்களின் மரியாதை ஆகியவற்றை உறுதிப்படுத்த அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு இருந்ததாகவும், கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதன் காரணமாக தற்போது அது நீங்கி இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனசங்கம்( பாஜகவின் முந்தைய வடிவம் ) காலத்தில் தேசிய அரசியலில் பாஜகவுக்கு சிறிய அளவிலேயே பங்கு இருந்ததாகத் தெரிவித்த நரேந்திர மோடி, தொண்டர்களின் கடும் உழைப்பே தற்போதைய நிலைக்குக் காரணம் என குறிப்பிட்டார்.