”8 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது”- பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 3 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளிடையே…

நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 3 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளிடையே காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்திருப்பது சாதாரண சாதனை அல்ல என்று தெரிவித்தார்.

இந்த சாதனையை நினைத்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைந்துகொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தொடர்ந்து  தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மிகப்பெரிய இலக்குகளை நோக்கி இந்தியா நகர்வதற்கு தேவையான தன்னம்பிக்கையை இந்த சாதனை வழங்கியிருப்பதாகத் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இதனால் குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெற முடியும் என்றார். மத்திய அரசின் பிரதம மந்தி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 3 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.

குஜராத் அரசு இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டது போல் அதிக செயல் திறனுடன் சிறப்பாக நடைபெற்று வருவதாக பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, அம்மாநில  அரசு சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு புகழாரம் சூட்டினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.