மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என சமூக செயல்பாட்டாளர் இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது.
கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் நேற்று முன் தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலிக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து 11 நாட்கள் காவலில் எடுத்துள்ளது.
மணிப்பூர் வீடியோ தொடர்பாக தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த சமூக செயல்பாட்டாளர் இரோம் சர்மிளா தெரிவித்ததாவது..
“எனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்பே, ராணுவம் ஒரு பழங்குடிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
தற்போது நடைபெற்ற நிகழ்வுகள் மிகவும் மோசமானது, உண்மையில் மனிதாபிமானமற்றது. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியை கடைபிடிக்கிறார். மணிப்பூரில் இயல்புநிலை திரும்புவது பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
மணிப்பூர் மாநில அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. மக்களின் தகவல் அறியும் உரிமையான இணைய சேவையை துண்டித்துள்ளது. இந்த நாட்டின் பிரதமரான மோடி மாநில அரசை அவர் அழைத்து பேசியிருக்க வேண்டும். அவர் தவறிவிட்டார். மணிப்பூரின் 60 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து, அந்தந்த தொகுதிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என தெரிவித்துள்ளார்.
இரோம் சர்மிளா மணிப்பூரில் சிறப்பு ஆயுதச் சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.