மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
கடந்த மே மாதம் இருபெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நேற்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 19 வயதான நுங்சிதோய் மெட்டே என்பவனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வதந்திகளை நம்ப வேண்டாம் என மணிப்பூர் அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவசர உதவிக்கு 9233522822 ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை காவல்துறை அல்லது அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் திரும்ப ஒப்படைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
காரி பகுதியில் உள்ள ஒரு பிரதான சாலையின் இருபுறமும் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதை அடுத்து இம்பாலில் புதிய வன்முறை வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.




