ராஜஸ்தான் அரசு ஓட்டு வங்கி அரசியல் செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சித்தோர்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழித்துவிட்டது. குற்றப்பட்டியலில் மாநிலம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானில் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்? மாநிலத்தை சூறையாடுவதில் ஒரு கல்லை கூட விட்டு வைக்கவில்லை.
காங்கிரசின் பிரியாவிடைக்கான கவுன்ட் டவுன் துவங்கி இருப்பதை முதல்வர் அசோக் கெலாட் நன்கு அறிவார். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படாமல் செயல்படுத்தப்படும். முதல்வர் கெலாட் தனது பதவியை பாதுகாப்பதில் மும்முரமாக இருந்தார். அவரது கட்சி அவரது பதவியை பறிப்பதில் மும்முரமாக இருந்தது. தேர்வு வினாத்தாள் கசிவு அதிகம் நடக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, வினாத்தாள் கசிவு தடுத்து நிறுத்தப்படும் என ராஜஸ்தான் இளைஞர்களுக்கு உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவோம். கலவரத்தை தடுத்து நிறுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம். இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவதை தினமும் செய்து வருகின்றனர். அவர்கள் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் குழப்பத்தை பரப்புகின்றனர். உதய்பூர் தையல்காரர் கொலையின் போது காங்கிரஸ் கட்சி என்ன செய்தது?. அவர்கள் ஓட்டு வங்கி அரசியல் செய்தார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.







