“அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்..” – Chief ஹேப்பினஸ் ஆஃபீசராக கோல்டன் ரெட்ரீவர் நியமனம் – எங்கு தெரியுமா?

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று கோல்டன் ரெட்ரீவர் நாளை Chief ஹேப்பினஸ் ஆஃபீசராக பணியமர்த்தி உள்ளது.

ஹைதராபாத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ஹார்வெஸ்ட் ரோபாடிக்ஸ் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்களைப் பயன்படுத்தி, விளைநிலங்களில் களைகளை அகற்றுதல், உரமிடுதல், அறுவடை செய்தல் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ‘டென்வர்’ என்கிற ஒரு நபரை தங்களுடைய குழுவில் இந்நிறுவனம் இணைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘டென்வர்’ என்பது கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய். இந்த நாய்க்கு அந்த நிறுவனத்தில் Chief ஹேப்பினஸ் ஆஃபீசர் (CHO) என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை சந்தோஷப்படுத்துவதே இதன் முழு நேரப் பணியாகும். டென்வர் உடன் விளையாடுவதால் ஊழியர்களின் மன அழுத்தம் குறைவதாக நம்பப்படுகிறது.

இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் அரெபகா லிங்க்ட்இன்னில் இந்தத் தகவலை பதிவிட்டு உள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களுடைய குழுவில் புதிதாக சேர்த்துள்ள ‘முதன்மை மகிழ்ச்சி அதிகாரி’ டென்வர். அவருக்கு உடைகள் குறித்த விதிகள் இல்லை, அவர் எதற்கும் கவலைப்படமாட்டார். அவர் வந்ததுமே பலரின் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டார். குழுவினரை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறார். அவரை எங்கள் குழுவில் சேர்த்தது சிறந்த முடிவு. அதிகாரப்பூர்வமாக எங்கள் பணியிடம் செல்லப்பிராணிகளின் நண்பன் என்கிற அடையாளத்தையும் பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இவரின் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த பதிவை பார்த்த பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு பயனர், “என்ன ஒரு படைப்பாற்றல், விலங்குகள் மீது எவ்வளவு அன்பு. இந்த யோசனையால் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம் ஐயா” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர் டென்வரை “மிகவும் அழகான அதிகாரி” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.