“தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பாருங்கள்!” – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீதி, எரிசக்தி, இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் குறித்த மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன. இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது.

ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆதாரமில்லாமல் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அது அவைக் குறிப்பில் இருந்து அவை நீக்கப்படுகிறது. வரலாற்றிலேயே முதல்முறையாக எதிர்க்கட்சியைவிட ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து அதிகம் நீக்கி இருக்கிறீர்கள், அதற்கு எங்களது வாழ்த்துகள்.

அவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பாகிறது. கேள்விகள் கேட்டால், நாங்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு பதில் கொடுக்கப்படுகிறது. இப்போது பாட்டெல்லாம் பாட ஆரம்பித்துவிட்டார்கள், சட்டமன்றத்திற்கு வந்திருக்கோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கோமா என்ற சந்தேகம் எழுகிறது.

தன்னுடைய மேஜையில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று எங்கள் அரசை குற்றம்சாட்டும் தொனியில் முதலமைச்சர் பேசியிருக்கிறார. தயவுசெய்து அந்த கோப்புகளை திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள்; நல்ல நேரம் எதாவது பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.