மியான்மரில் திருமண நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் மீது ராணுவ விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரின் ஷான் மற்றும் கரென்னி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ள மோபே (Moe Bye) கிராமத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இடம்பெயர்ந்த மக்களான மணமக்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமானத்தின் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பலர் உயிரிழந்து கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.




