ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்க 75 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பயனாளிகளில் குறைந்தது 30 சதவீதம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








