“குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

 “குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய வேண்டாம்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.  பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில்…

 “குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய வேண்டாம்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். 

பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் நேற்று குண்டுவெடித்தது.  இதில் கடை ஊழியர்கள்,  வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர்.  முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதன்பின் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து,  பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில்,  “ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரிடம் நான் தொலைபேசியில் பேசினேன்.  வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைப்பையில் இருந்துதான் ஏதோ வெடித்துள்ளது.  சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார்.  இது ஏதோ குண்டுவெடிப்பு போலவே உள்ளது.  பெங்களூரு மக்களுக்கு முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான்.  குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது.  வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது.  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில்,  இன்று குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.  முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர் பஸ்ஸில் வந்து டைமரை செட் செய்து குண்டு வெடிக்கச் வைத்துள்ளார்.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்யக் கூடாது.  மங்களூரு குண்டுவெடிப்புக்கும், பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.