கொங்கு ஜவுளி தொழில் துறையினர் பீனிக்ஸ் பறவையாக செயல்பட்டு இந்தியாவில் ஜவுளி தொழிலின் வளர்ச்சி இஞ்சினாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 90 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்புடன் இணைந்து ஆசிய அளவிலான ஜவுளித்துறை மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் ஜவுளித் துறையில் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது :
இதுவரை குறைந்த நேரத்தில் மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் எந்த மாநிலத்துக்கும் இரண்டு முறை சென்றதில்லை. அவருக்கு ஜவுளித் துறையின் மீது உள்ள ஈடுபாடு தான் இதற்கு காரணம். சிறு சிறு பிரச்னை இருந்தாலும் அதை சரி செய்ய பியூஷ் கோயல் நிவர்த்தி செய்ய முனைப்பு காட்டுவார்.
ஜி.20 மாநாடு ஏற்பாட்டிற்கு இடையில் விழாவில் மத்திய அமைச்சர் கலந்துகொள்வது மகிழ்ச்சி. ஜவுளி துறையின் பிரச்னையை சந்தித்த , கஷ்ட காலத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் இருந்துள்ளார்
.2030இல் நாட்டின் ஜவுளி தொழில் 350 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த கனவு நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது.காரணம் கொங்கு ஜவுளி தொழில் துறையினர் பீனிக்ஸ் பறவையாக செயல்பட்டு இந்தியாவில் ஜவுளி தொழிலின் வளர்ச்சி இஞ்சினாக உள்ளனர்.
பிரதமர் காசியில் தமிழ் சங்கத்தை நடத்திய போது, தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் காசியில் பங்கேற்று மத்திய அமைச்சரை சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 3.4 டிரில்லியன் டாலருடன் 5 வது இடத்தில் உள்ள நாம் விரைவில் முதல் இடத்தில் வந்துவிடுவோம் என அண்ணாமலை கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், வேலைவாய்ப்பில் குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக வேலை வழங்குவதில் ஜவுளித் தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும்,செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுதொடர்பான தொழிலை அதிகரிக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.







