‘உச்ச நீதிமன்ற இணையதளம் போலவே போலி இணையதளம்’ – கவனமுடன் இருக்க தலைமை நீதிபதி எச்சரிக்கை.!
”உச்ச நீதிமன்ற இணையதளம் போலவே போலி இணையதளம் உருவாக்கி மோசடி செய்யும் கும்பலிடம் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என, தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போலவே போலியான இணையதளம் துவங்கி, மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி நடந்து வருவது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி தொடர்பான தகவல்களை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் கேட்காது எனவும், அது போன்ற தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் போலி இணையதளத்தில் பணத்தை பறிகொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் .சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.







