ஃபீனிக்ஸ் பறவை வித்யா பாலன் – கடந்து வந்த பாதை…

தொடர் தோல்விகள், புறக்கணிப்புகள் என தொடங்கிய சினிமா வாழ்க்கையை தன் வசமாக்கி முத்திரை படைத்த நடிகை வித்யாபாலனின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம். சாக்லேட் பாய்…

தொடர் தோல்விகள், புறக்கணிப்புகள் என தொடங்கிய சினிமா வாழ்க்கையை தன் வசமாக்கி முத்திரை படைத்த நடிகை வித்யாபாலனின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சாக்லேட் பாய் மாதவனை ஆக்-ஷன் ஹீரோவாக்கியது ரன் திரைப்படம். அந்த படத்தில் மாதவனோடு ஜோடி போட்டிருக்க வேண்டியவர் வித்யாபாலன். ஒப்பந்தம் செய்யப்பட்டு என்ன காரணத்தினாலோ ரன் படத்தில் இருந்து வித்யாபாலன் நீக்கப்பட்டார். ஆனால் அது வித்யாபாலனுக்கு முதல் தோல்வியல்ல. ஏற்கனவே கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ’சக்கரம்’ என்கிற படத்தில் ஒப்பந்தமாகி அந்த படமும் கைவிடப்பட்டு இருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஓய்ந்து விடாமல் தனது விடா முயற்சியால் பாலிவுட்டின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவராக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் வித்யாபாலன்.

கேரளாவில் வசித்த தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் வித்யாபாலன். ஆரம்பத்தில் மோகன்லால், மாதவன் ஆகியோருடன் நடிக்க கிடைத்த வாய்ப்புகள் கை நழுவிப்போனதால் ராசி இல்லாதவராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் சக்கரம் படம் மீண்டும் தயாரானபோது அதில் மோகன்லாலுக்கு பதிலாக பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்தார். ரன் படத்தின் வாய்ப்பு நழுவியதை அடுத்து இம்முறையும் வித்யாபாலனுக்கு பதிலாய் மீரா ஜாஸ்மின் கதாநாயகியானார். அடுத்ததாக ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் வித்யாபாலன். ஆனால் வித்யாபாலன் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாய் திரிஷா கதாநாயகியானார்.

திரையுலகம் கதவை திறக்கும் வரை காத்திருக்காமல் விளம்பரப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் வித்யாபாலன். 2003-ம் ஆண்டு வெள்ளித்திரையில் பெங்காலித் திரையுலகம் அவருக்கு கதவுகளைத் திறந்தது. நடித்த முதல் படத்திலேயே கொல்கத்தாவின் அந்தலாக் புரஸ்கார் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

ஏற்கனவே வித்யாபாலனை வைத்து பல விளம்பரப் படங்களை இயக்கிய பிரதீப் சர்கார் 2005 ஆம் ஆண்டு தனது பரினீத்தா படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். பாலிவுட் உலகத்தில் தனக்கென தனி ஒரு சிம்மாசனத்தை வித்யாபாலன் உருவாக்க அந்தப்படம் முதற்படிக்கட்டாய் அமைந்தது. இந்தியில் அறிமுகமான முதல் படத்திலேயே ஃபிலிம் ஃபேரில் இரு விருதுகளை அவர் தட்டிச்சென்றார்.

நல்ல நடிகையாக பெயர் எடுத்த பிறகு, நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளுக்கு முன்னுரிமையளித்த வித்யாபாலன், குரு, இஷ்க்யா, நோ ஒன் கில்டு ஜெசிக்கா என, நடிப்புக்குத் தீனி போடும் படங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற கஹானி, துமாரி சுலு உள்ளிட்ட படங்கள் பிற மொழிகளிலும் முன்னணி நடிகைகள் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

வித்யாபாலன் எனும் நடிகையை நாடு முழுவதும் அறியச் செய்தது சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில், அவர் நடித்த டர்ட்டி பிச்சர் திரைப்படம் தான். எந்த கதாபாத்திரம் என்றாலும் வித்யா பாலன் என்கிற நடிகை அதனை மெருகேற்றிவிடுவார் என அவரைப் புறக்கணித்தவர்களும் புகழும் நிலைக்கு உயர அவரது ஈடுபாடும் முயற்சியுமே காரணம்.

நேரடியாக தமிழில் அவர் நடித்த ஒரே திரைப்படம் அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை மட்டுமே… தோல்வியில் தொடங்கிய தனது பயணத்தை வெற்றியாக மாற்றிய வித்யா பாலன் எனும் ஃபீனிக்ஸ் பறவைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

– அன்சர் அலி, முதன்மை செய்தியாளர், நியூஸ் 7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.