கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி: சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை கண்டெடுப்பு!

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ம் மற்றும் 3ம் கட்ட அகழாய்வு…

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது.

கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2ம் மற்றும் 3ம் கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனை தொடர்ந்து 4 முதல் 7ம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர்.

கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7ம் கட்ட அகழாய்வு பணியானது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பணி நடைபெற்றது.

பல கட்டமாக தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழரின் தொண்மையான வரலாறு குறித்த பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.

https://twitter.com/tthenarasu/status/1688946450351439872?s=46

கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது. மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம் 5.4 செ.மீ அகலம் 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது.

இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.