2022-23 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி தொகையை 8.15% ஆக உயர்த்தி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் எதிரொலியாக கடந்த மார்ச் 2022ல், 2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2023 மார்ச் மாதத்தில், டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், 2022-23-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த வட்டி விகிதமானது 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, 2022-23-ம் ஆண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய வட்டி விகிதத்துக்கு நிதியமைச்சகம் மூலமாக அரசின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற சூழலில், இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கையில் இந்த திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் இதற்கான பலன் சந்தாதரர்கள் கணக்கில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







