ஞானவாபி மசூதியில் ஆய்வு : உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

இந்திய தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை  தொடங்கவிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதற்கு  இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி…

இந்திய தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை  தொடங்கவிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதற்கு  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.  மேலும் இந்த ஆய்வு நடத்தும்போது  புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்து அதனை  ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இந்திய தொல்லியல் துறையினர் வாரணாசிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று மசூதியில் ஆய்வுப் பணிகளை திங்கள்கிழமை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று  காலை 7 மணிக்கு ஆய்வுப் பணிகள் தொடங்கவிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும் ஞானவாபி மசூதியில், வருகிற ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வமான ஆய்வை நடத்தக் கூடாது என்றும், அதுவரை அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தர நிறுத்திவைக்கப்படுவதாகவும், அதற்குள், மசூதி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவது தொடர்பான வாராணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு ஞானவாபி மசூ நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.