பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தன. இந்த நிலையில்தான் இழப்பை ஈடுகட்டும் விதமாக எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை கடந்த 15-ம் தேதியில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அன்றைய தினம் ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 அதிகரித்தது. அந்த வரிசையில் நேற்று முன் தினமும் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.108.20-க்கு விற்பனையானது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து, ரூ.99.98-க்கு விற்பனையானது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.36-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7.59-ம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நேற்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சற்று குறைந்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.107.77-க்கு விற்பனையானது. டீசல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.99.55-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ.99.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.