நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியைப் பயன்படுத்தக் கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியைப் பயன்படுத்தக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் இந்தி மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரமேஷ்வர் நாத் மிஸ்ரா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த தலைமைத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், “மொழி மாற்றம் என்பது நீதிமன்ற உத்தரவுகள் மூலம் நிகழுபவை அல்ல, அது கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகப் படிப்படியாகவே நடக்கும்” எனக் குறிப்பிட்டார். மேலும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு கட்டம் கட்டமாக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், தீர்ப்புச் சுருக்கங்கள் இந்தியில் வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பிற பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் உரிய மரியாதையை அளிக்கும் என்றார்.

விசாரணையின்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி வி.மோகனா, நீங்கள் கேட்பது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான கோரிக்கை, அதற்கு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும்? எனக் கேள்வி எழுப்பியதோடு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(1)(அ)-ன் படி உச்சநீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.