பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள யானையை விடுவிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், யானை மனிதர்களை போன்று இல்லை எனக்கூறி அந்நாட்டு உச்சநீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் ஹேப்பி என பெயரிடப்பட்ட யானை ஒன்று உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக அந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த யானையை உயிரியல் பூங்காவில் இருந்து விடுவிக்க வேண்டும் என தனியார் குழுவினர் வழக்கு தொடர்ந்தனர். யானைக்கு சமூக தொடர்பு இல்லை என்றும், பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலை அதனை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நியூயார்க்கில் உள்ள உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேப்பி யானை தனியாக பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹேப்பி யானைக்கு சுதந்திரம் வேண்டும் என்றும், அது சட்டப்பூர்வ நபராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், எனவே அதனை விடுவித்து தீர்ப்பளிக்க வேண்டும் என வாதிட்டனர். இதற்கு விளக்கமளித்த வனவிலங்கு பாதுகாப்பு சங்கம், ஹேப்பி யானை மற்ற யானைகளுடன் நன்றாக பழகாத பழக்கம் கொண்டிருக்கிறது என்றனர். இதனால், மற்ற யானைகளிடமிருந்து பிரித்து தனியாக பராமரிக்கப்படுவதாக விளக்கமளித்தனர். ஆனால் மற்ற யானைகளின் ஒலி, வாசனை மற்றும் தொடுதல் திறன் யானைகளுக்கு உள்ளதால், மற்ற யானைகளுடன் ஹேப்பி தொடர்பில் இருக்க முடியும் என்றனர்.
இருதரப்பு வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி ஜேனட் டிஃபியோர். யானை பராமரிக்கப்பட்டு வருவது சட்டவிரோதமானது என கருதமுடியாது என்றார். மனிதர்களை போன்று விலங்குகள் இல்லை என தெரிவித்த அவர்கள் ஹேப்பியை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற முடிவை கைவிடுங்கள் எனக்கூறி மனுவை நிராகரித்தனர்.
இருப்பினும், வழக்கு தொடர்ந்த அந்த குழுவினர் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஹேப்பி யானையை விடுவிக்க அடுத்தக்கட்ட முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஹேப்பி யானைக்கு மட்டும் இது இழப்பு அல்ல என கூறிய அவர்கள் பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இது இழப்பு என வேதனை தெரித்தனர்.
அதேநேரத்தில், யானை தனியாக வளர்க்கப்படுவதாகவும், அதற்கு விடுதலை வேண்டும் என்றே அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, யானையை தொந்தரவு செய்வது மற்றும் தவறான சிகிச்சை மேற்கொள்வது போன்ற என்ற குற்றமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








