2023 டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் என்ற இலக்கை அடையமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடி 18 மாதங்களில் 10 லட்சம் அரசு வேலை வழங்க, பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகச் செய்தி வெளியானது. இந்த செய்தி வேலை தேடும் இளைஞர்களுக்கு குட்நியூஸாக இருந்தாலும், 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் அரசு வேலை வழங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறப்புப் பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிடப் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகவும், அதனடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக, மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாகப் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு பிறகே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தெரிவித்துள்ளது போல, 2023 டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் என்ற இலக்கை அடைய, இன்றிலிருந்து நாள்தோறும் 2560 பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே 18 மாதங்களில் 10 லட்சம் வேலை என்பது சாத்தியம் எனக் கூறப்படுகிறது.
2019-20ல் மொத்த ஊதிய செலவில், 81.52% நான்கு துறைகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே (35.06% பங்கு), பாதுகாப்பு (28.17%), வீடு (12.69%) மற்றும் பதவிகள் (5.6%). மார்ச் 31, 2020 தரவுகளின் படி, (யூனியன் பிரதேசங்கள் உட்பட) மத்திய அரசு சிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 3.191 மில்லியனாக இருந்தது, தரவுகளின்படி அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 4.078 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 10 லட்சம் என்ற இலக்கில், பாதுகாப்பு சேவைகளில் உள்ள காலியிடங்களும் அடங்கும் என அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்களையும் சேர்த்து மத்திய அரசில் சுமார் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பாக மத்திய அரசில் மட்டுமே சுமார் 9 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் இதனால் பிரதமரின் 10 லட்சம் வேலை என்ற இலக்கு எளிதானதுதான் என்றும் வல்லுநர்கள் சொல்கிறார்கள். ராணுவத்தில் அக்னி வீரன், அக்னி பாதை திட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் பிரதமரின் வேலைவாய்ப்பு இலக்கை எளிதாக நிறைவேற்ற உதவும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர். உறுதிப்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் 10 லட்சம் இலக்கை நிச்சயம் அடைந்து விடலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என்றும் மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் வல்லுனர்கள் சொல்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








