விருதுநகர் தொகுதி காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த…

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது.  இதற்காக ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற இல்லத்தரசிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்திற்காக விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்தாக கூறப்படுகிறது.  இதனையடுத்து விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  தொடர்ந்து,  வழக்கை விசாரித்த நீதிபதிகள் “டோக்கன் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.  விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.