டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் பகுதியாக இருந்து வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய பிரச்னைகளை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவது வழக்கம். அண்மையில் நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அதேபோல தற்போது எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, டெல்லியில் ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் போராட்ட தளத்திலிருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
“ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்துவதற்கான இடமாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்த நிலையில், தற்போது அது போராட்ட தளத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.மேலும் ராம் லீலா மைதானம் புராரி மைதானம், கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டத்திற்கான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் ராமலீலா மைதானம் போராட்டத்திற்கு உகந்த இடமில்லை என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அந்த மைதானத்தை போராட்டத் தளமாக அறிவித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் அதுபோல போராட்ட தளத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள புராரி மைதானம், கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் ஆகிய இடங்கள் டெல்லி குப்பை கிடங்குக்கு அருகே உள்ள பகுதிகளாக உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




