சீனாவில் படித்து வந்த மாணவர்கள், மீண்டும் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் இந்திய மாணவர்கள், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளை பயின்று வந்தனர். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். பின்னர், கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பை தொடர சீன அரசு முன்னரே அனுமதி அளித்தது.
ஆனால், இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா செல்ல விசா உள்ளிட்ட அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர மீண்டும் சீனா வரலாம் என்று சீன அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் வரும் 8ஆம் தேதி முதல் சீனாவில் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும்,பதிவு செய்யும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்த பின், படிப்படியாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது.
20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் படித்து, தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








