பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மிக விரிவான பரிசோதனை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
அதில், மற்ற தடுப்பூசிகளைவிட கோவேக்சின் தடுப்பூசி சிறுவர்களிடையே மிக குறைந்த அளவே பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் நல்ல பலனை அளித்ததும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தனர். இந்நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தற்போது 12 முதல் 18 வயதினருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது.







