நியூஸ்7 தமிழின் இந்த வார வளரும் ஆளுமைகளும் 7 கேள்விகளும் பகுதியில் பறையிசை பயிற்றுநர் சந்திரிகாவுடன் சிறப்பு நேர்காணல்.
உங்களை பற்றி சொல்லுங்க?
நான் சந்திரிகா. கோவை அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துட்டு இருக்கேன். இளங்கலை மற்றும் முதுகலை இரண்டையுமே கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில்தான் படிச்சு முடிச்சேன். இளங்கலை படிக்கும் போதே வீதி நாடகங்களில் நடிப்பேன். அதன் பின்னணி இசைக்காக பறையை கத்துக்க துவங்குனேன். 6 வருடங்களாக கத்துக்கிட்டும், கத்துக் கொடுத்துக்கிட்டும் இருக்கேன்.
பறை இசை பற்றி மக்கள் பார்வை அன்றும், இன்றும் எப்படி இருக்கு?
முன்னர் இருந்ததை காட்டிலும் இப்போ கொஞ்சம் முற்போக்கான கண்ணோட்டம் வளர்ந்துகிட்டு இருக்குன்னு சொல்லலாம். மனுசங்களுக்கே சாதியில்லை, மதமில்லை; நாம எல்லாரும் ஒண்ணு, சரிநிகர் சமானமானவர்கள்னு பேசிகிட்டு இருக்கும் இந்த காலத்துல இசைக்கருவிகளில் சாதியை புகுத்தி ஒண்ணு மேல, இன்னொன்னு கீழேன்னு பிரிச்சு பாகுபடுத்தி பாக்குறது சரியில்லைன்னு மக்கள் புரிஞ்சுக்க தொடங்கி இருக்காங்க.
இந்த கலையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல என்ன செய்ய போகிறீர்கள்?
எந்த ஒரு கலையோ, மொழியோ வளர்ச்சியடைய அதிமுக்கியமான விசயம் அது நம்ம வீட்டுக்குள்ள முதல்ல உபயோகிக்கப்படணும், பேசப்படணும், கொண்டாடப்படணும். இந்த ஆதி கருவியைப் பற்றின விழிப்புணர்வை இந்த தலைமுறைக்கு கடத்தி வீட்டிற்குள்ள எடுத்துட்டு போக வைக்கணும்.
பறையின் வகைகள் என்னென்ன? எத்தனை நாளில் கற்றுக்கொள்ளலாம்?
‘பறை’ என்னும் சொல்லுக்கு ‘பேசுதல்’ ‘ சொல்லுதல்’ ‘அறிவித்தல்’ இப்படி பல பொருள் இருக்கு. இன்னைக்கு வரைக்கும் மலையாளத்தில் உயிர்ப்போட இந்த சொல் உபயோகிக்கப்படுது. தோல் கருவிகள் அனைத்தும் ஆதியில செய்தி தொடர்புக்கான கருவிகளா பொதுவாக ‘பறை’ என்னும் பெயரில் விளிக்கப்பட்டிருக்கு. தமிழ் இலக்கியங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறைக் கருவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கு.
எந்த ஒரு கலையிலும் கற்றுக்கொள்ள எல்லை என்பதே இல்லைங்கறது என்னோட நிலைப்பாடு. நான் ஆறு வருடங்களுக்கு முன்னால தொடங்கினேன். இன்னும் கத்துக்கிட்டு தான் இருக்கேன். இதையே தான் நான் சந்திச்ச 70 வயது பறையிசைக் கலைஞர் ஒருவரும் சொன்னாரு. ஆனால், பறை இசைக்கிறதுக்கான அடிப்படையினை எட்டு முதல் பத்து மணி நேரத்தில் பழகிடலாம். ஆனால், தொடர் பயிற்சி அவசியம்.
தற்போது பெரும்பாலும் பிளாஸ்டிக் பயன்படுத்தி பறை பயன்படுத்தப்படுகிறது? தோல் பறை அதிகம் பயன்படுத்துவதில்லை ஏன்?
இது முற்றிலும் வசதிக்காக மற்றும் செலவை குறைக்க வந்திருக்கிறது ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய ஒண்ணு. தோல் பறைகள் விலை சற்று கூடுதலாக இருக்கும், தோல் பறைகளை ஒரு நிகழ்வுக்கு முன் விறைப்பேற்ற வேண்டியிருக்கும். தோல் கிழிஞ்சு போய்ட்டா மீண்டும் மூட்டணும். ஆனால், பிளாஸ்டிக் பறைகள் அப்படி கிடையாது. பிளாஸ்டிக் பறைகள் இரும்பு தகடுகளை இணைச்சு, போல்ட் & நட் போட்டு கட்டிடலாம். அதுவே, தோல் பறைன்னா எந்த செயற்கையான பொருளும் தேவையில்லை. கட்டை, தோல் மட்டுமில்லாம ஒட்டுவதற்கான பசை கூட புளியங்கொட்டை பயன்படுத்தி தான் தயாரிக்கப்படும். ஓசை அளவிலும் தோல் பறைகள் தான் சிறந்தது.
பறை இசைக்க ஆடை கட்டுப்பாடுகள் ஏதேனும் உள்ளதா?
பெரும்பாலான இடங்கள்ல பாரம்பரியமான உடைகள் அணியனும் கேட்கறது உண்டு. ஆனால், எந்த கலைஞர்களாக இருந்தாலும் உடை அவரவர் வசதி சார்ந்தது தான். முழங்கால் வேட்டி கட்டிக்க சொன்னதும், மேல் சட்டை அணியாமல் பறை இசைக்கச் சொன்னதும் அந்த காலம். இனி எந்த உடை தனக்கு பொருத்தமா இருக்குன்னு கலைஞர்களே தீர்மானிக்கட்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பற்றி? அவரிடம் கோரிக்கை எதாவது வைக்க நினைக்கிறீர்களா?
சிறப்பானதொரு ஆட்சியை கொடுத்துட்டு இருக்கார்ன்னு தான் தோணுது. இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கலையும், கலைஞர்களும் இந்த மண்ணின் உயிர்நாடி. மண்ணின் கலைஞர்களோட வாழ்வு மேம்படணும். தமிழ்நாட்டில் இருக்கிற பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்க அந்தந்த பகுதியில் உள்ள அனுபவமிக்க நாட்டுப்புறக் கலைஞர்களை முழு/பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அதிலும் பெண் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிக்க வேண்டும்







