“வைக்கம் போராட்டத்தை போல பெரியார் நினைவகமும் கம்பீரமானது” – முதலமைச்சர் #MKStalin பேச்சு

வைக்கம் போராட்டத்தை போல பெரியார் நினைவகமும் கம்பீரமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு…

"Today should be engraved in golden letters" - Chief Minister #MKStalin's speech on Vaikam protest centenary celebrations

வைக்கம் போராட்டத்தை போல பெரியார் நினைவகமும் கம்பீரமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக,1994-ல் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. 1994-ல் திறக்கப்பட்ட இந்த நினைவகம், தற்போது ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரளா சென்றார்.

இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் பங்கேற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் எ.வ.வேலு, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது,

“பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய ஊரில் அவருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டுள்ளது. பெரியாருக்கு கிடைத்த புகழ் மாலைதான் திராவிடத்தின் வெற்றி. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை காண மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி இல்லையே என்ற வருத்தம் உள்ளது. எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழுப்புடன் வெற்றி பெற வைத்தவர் பெரியார் என்று அண்னா கூறினார். சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக வைக்கத்தில் பெரியார் நினைவகம் உள்ளது.

வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைபோல பெரியார் நினைவகமும் கம்பீரமானது. வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகம் திறந்து வைக்கப்பட்ட இந்நாள் சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டும். சமூக அரசியல் போராட்டத்தின் வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்துள்ளது. வைக்கம் ஒடுக்க முறையை எதிர்த்த கேரள காங்கிரஸ் தலைவர்கள் கைதாகினர். வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் இரு முறை கைதானார். வைக்கம் போராட்ட நினைவு அஞ்சல் தலையை விரைவில் வெளியிட உள்ளோம்.

இனி நாம் அடையவிருக்கும் வெற்றிகளுக்கு அடையாளமாக வைக்கம் நினைவகம் இருக்கும். பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வரலாற்று பெருமை. பெரியார் நூலகம் கட்டிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திகழ்கிறார். கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும். நாட்டில் சமூக நீதிக்கான தொடக்கப் புள்ளி வைக்கம் போராட்டமாக இருந்தது.

வைக்கம் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்ற பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என திரு.வி.க. போற்றினார். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளோம். ஆனால் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடல் மாடல் அரசின் கொள்கையாகவே உள்ளது. எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மக்கள் மனமாற்றம் மிகவும் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். முன்பு இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும். நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க வேண்டும். சமநிலை சமூகத்தை அடைய நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.