திருநெல்வேலியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்!

நெல்லையில்  ரூ.85 கோடி மதிப்பீட்டில் சந்திப்பு பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம்.  இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியின் சீர்மிகு…

நெல்லையில்  ரூ.85 கோடி மதிப்பீட்டில் சந்திப்பு பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம்.  இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கியது.  நீதிமன்ற வழக்குகள் காரணமாக கட்டுமான பணிகள் தாமதம் அடைந்தது.  இதனால் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிந்து எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில்,  தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து நேற்று சந்திப்பு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.  6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதேபோல் நெல்லையில் பல்வேறு திட்டங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நெல்லை பெரியார் பேருந்து நிலையம் ரூ.85 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு பூமிக்கு அடியில் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஒரு தளம், பேருந்துகள் நின்று செல்ல தரைத்தளம், அதற்கு மேல் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு 3 தளங்கள் என மொத்தம் 5 அடுக்குகளாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

150-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.  17 பேருந்துகள் நின்று செல்ல நடைமேடைகள் உள்ளன. மேலும், மேல்தள கடைகளுக்கு செல்ல மின்தூக்கி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இதுதவிர டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.  பேருந்துகள் 3 வழிகளில் வந்து செல்ல வாயில்கள் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.