சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது; முதலமைச்சர்

சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர்…

சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்துடன், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.