முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், பேரறிவாளன் தரப்பும் மாறி மாறி எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை குறித்து மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளன் தரப்பு எழுத்துப்பூர்வமான வாதத்தை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அதில், அமைச்சரவை முடிவை குடியரசு தலைவர் முடிவெடுக்க ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளது. மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்றும் அவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக அவர் முடிவெடுக்கவோ, செயல்படவோ முடியாது என்றும் விளக்கமளித்துள்ளது.
302-ன் கீழ் தண்டனை பெற்றவர்களின் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் என்ற மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்றால் இத்தனை ஆண்டுகளாக ஆளுநர் 161ன் கீழ் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணானதாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றம் தனக்கான தனிப்பட்ட அதிகாரமான 142ஐ பயன்படுத்தி, பல வழக்குகளில் முடிவெடுத்ததுபோல, பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு எடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது.
இதேபோல், மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில், ஏற்கனவே மரண தண்டனை பெற்ற இவருக்கு கருணை மனு மீது முடிவெடுக்கலாம் என்றும் தாழ்த்தப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையின் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இவரை விடுதலை செய்வது தொடர்பான மனு குடியரசு தலைவர் முன்பு பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டது.
ஏற்கனவே கடந்த மார்ச் 9ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இந்த விவகாரத்தின், குற்றத்தின் தீவிர தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே தான் ஆளுநர் இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அனுப்பியுள்ளார் . மேலும் இது ஐ.பி.சி 302ன் கீழ் தண்டனை பெற்றாலும் வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு, அவ்வாறு இருக்கும்போது இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது எனவே இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என தெரிவித்த மத்திய அரசு தரப்பு பேரறிவாளன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.








