கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான சஹானா, தனது 21 ஆவது பிறந்த நாளன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சஹானா. இவர் பல்வேறு விளம்பரங்களில் குறிப்பாக நகை விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். சில திரைப்படங்களிலும் சிறிய அளவிலான காட்சிகளில் நடித்துள்ளார்.
சஹானாவுக்கும், சஜ்ஜத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சஜ்ஜத்தின் சகோதாரர்களும், சகோதரியும் சஹானாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அளித்த யோசனைப்படி, சில வாரங்களுக்கு முன்புதான், கோழிக்கோடு நகரில் பரம்பில் பசார் என்ற பகுதியில் வாடகை வீட்டில் கணவருடன் சஹானா தனிகுடித்தனம் வந்துள்ளார்.
அங்கு வந்த பிறகும் கணவர் சஜ்ஜத் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சஹானாவுக்கு நேற்று 21வது பிறந்த நாள். எனினும், கணவர் சஜ்ஜத் தாமதமாகவே வீட்டிற்கு வந்ததாகவும் இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் சஹானா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கோழிக்கோடு வந்த அவர்கள், தங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவரை, சஜ்ஜத் கொலை செய்திருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
வரதட்சணை கேட்டு, சஜ்ஜத் தொல்லை தந்ததாகவும், தங்கள் மகளை அவளது வீட்டிற்கு வந்து தாங்கள் சந்திக்கவோ, தங்கள் வீட்டிற்கு தங்கள் மகள் வரவோ சஜ்ஜத் அனுமதித்ததில்லை என காவல்துறையிடம் தெரிவித்துள்ள அவர்கள், இது திட்டமிட்ட கொலை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீட்டின் உரிமையாளர், சஜ்ஜத்தின் குரல் கேட்டு தாங்கள் வீட்டிற்குள் சென்றதாகவும், அப்போது சஜ்ஜத்தின் மடியில் சஹானா கிடத்தப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சஹானா குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சஜ்ஜத் கூறி உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், ஆனால், மிகச் சிறிய கயிறுதான் அங்கு இருந்ததாகவும், எனவே, இதனை தற்கொலையாக கருத முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சஜ்ஜத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.










