பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட 2,937 ஏக்கர் நிலத்தை மீட்க கோரிய மனுவுக்கு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக குன்னம், வேப்பந்தட்டை கிராமங்களில் 2 ஆயிரத்து 937 ஏக்கர் நிலம், கடந்த 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்திய தனியார் நிறுவனம், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காமல் அந்த நிலங்களை அடமானம் வைத்து, வங்கிகளில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெற்றதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வங்கிகளில் பெற்ற கடனை வேறு பணிகளுக்கு பயன்படுத்தியதன் மூலம், அந்த தனியார் நிறுவனம், நில உரிமையாளர்களை மோசடி செய்ததாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது. முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனு மீது இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.