மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
36 மையங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிற வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 65 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது கர்நாடக மக்கள் விழிப்புடன் இருப்பதைக் காட்டுகிறது. இது மக்களின் வெற்றி. அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக செயல்பட்டதால், மக்கள் காங்கிரசுக்கு ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். வெற்றி பெற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் மக்களுக்கு ஜனநாயகப் பணியாற்றுவோம்.
மேலும் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் அனைவரையும் இன்று மாலைக்குள் இங்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர்கள் வந்தவுடன், அவர்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படும். மேலும் முதல்வர் யார் என்பது குறித்தும் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.







