”கர்நாடகத்தில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டது” – காங்கிரஸ் வெற்றிக்குப் பின் ராகுல் காந்தி பேட்டி

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ்,…

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேள தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது :

”கர்நாடகாவில் இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் பிரிவினைவாதம் கொண்டு தேர்தலை சந்திக்கவில்லை. மாறாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஏழை எளிய மக்களுடன் சேர்ந்து நின்றது. முதலாளித்துவவாதிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஏழை மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு கர்நாடக மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.