தமிழக மக்கள் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழக மக்கள் நல்லவர்களை, திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தனியார் கல்லூரியின் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.…

தமிழக மக்கள் நல்லவர்களை, திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தனியார் கல்லூரியின் பணியாளர்கள் நாள்
நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்த நிறுவனத்தைப் போன்று அனைத்து நிறுவனங்களும் பணியாளர்கள் நாளை கொண்டாட வேண்டும். எத்தனை நிறுவனங்கள் பணியாளர்களை பற்றி சிந்திக்கிறார்கள் என நமக்கு தெரியாது. ஆனால் பணியாளர்களை கண்டுகொள்ளவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் யாருடனும் போட்டி போடுகிறோமோ இல்லையோ, google உடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.

மேலும் தொழிலாளர்கள் எதற்காகவும் மகிழ்ச்சியை தொலைத்து விடாதீர்கள் . சரியாக பணியாற்ற வேண்டுமென்றால் மனதையும் உடலையும் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக காலையில் சிறிது நேரம் ஒதுக்கி உடல் நலனை பாதுகாக்க யோகா செய்ய வேண்டும். யோகா செய்தால் அதிகமாக பணி செய்ய முடியும். ஆகவே பணி செய்வதற்கான சக்தியை முழுமையாக பெற யோகா செய்ய வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

இதனையும் படியுங்கள்: திமுக, அதிமுகவினரிடம் தங்கத்தையும் கேளுங்கள் – வாக்காளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்

இதையடுத்து தொடர்ந்து மேடையில் மாணவர்கள் முன்பு பேசிய அவர், உங்கள் மத்தியில் பேசும்போது எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஏனென்றால் மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்களை விட புத்திசாலிககள். அதனால்தான் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் என நகைச்சுவை கலந்த தோணியில் பேசினார் .

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திராஜன்,பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு உன்னதமான நோக்கம் எனவும் இந்த பணியாளர்கள் தினத்தை அனைத்து நிறுவனங்களுக்கும் பின்பற்றலாம் என்பது தனது யோசனை தெரிவித்தார்.

பின்னர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக தேர்ந்தெடுக்கபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஆளுநர் தமிழிசை, ஆளுநர்கள் பிரதமரால், உள்துறை அமைச்சரால் பரிந்துரைக்கபட்டு அதன் மூலம் ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆக அவர்கள் எங்களின் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

ஆனால் தமிழக மக்கள் எங்களின் திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தமிழ் மக்கள் எங்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கி இருந்தால், எங்களை மந்திரிகளாக ஆக்கியிருப்பார்கள். எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக முடியவில்லை என்பதால்தான், திறமையானவர்களை வீணடிக்க வேண்டாம் என ஆளுநர்களாக ஆக்குகிறார்கள்.

இதனையும் படியுங்கள்: தமிழ்நாடு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன- அண்ணாமலை

நான் தமிழக மக்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் , தயவு செய்து திறமையாளர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உடையவர்கள் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், முகநூலில் “உங்களைப் பற்றி எனக்கு தெரியாதா? உங்களால் ஆயிரம் ஓட்டு வாங்க முடியவில்லை, 2000 வாங்க முடியவில்லை, டெபாசிட் இழந்தீர்கள்” என எழுதலாம். அது யார் தவறு எங்களுடைய தவறு கிடையாது. நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்.

பின்னர் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக தமிழ்நாடு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலைத்து பேசிய அவர், பணியாளர்கள் வட இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கு யார் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் . அந்த சிந்தனை வந்தது என்றால் நாம் அதைப் பற்றி பதில் கூறலாம் என கூறியவர், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது , தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை பற்றி அண்ணாமலையிடம் கேளுங்கள் என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.