மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்

மதுரை மாவட்டத்தில் இதுவரை 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக…

மதுரை மாவட்டத்தில் இதுவரை 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தொடர்பான விவரங்களை அம்மாவட்ட சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 8,14,156 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் முதல் தவணையை 6 லட்சத்து 42 ஆயிரத்து 951 பேரும், 2ம் தவணையை 1 லட்சத்து 71 ஆயிரத்து 205 பேர் செலுத்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடையோர் மொத்தம் 26 லட்சம் பேர் உள்ள நிலையில் தற்பொழுது 8 லட்சத்திற்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்து கொண்டோரின் விகிதம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமீப காலமாக தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுவதால் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் என மதுரை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.