தமிழக அரசியலில் மாற்றத்திற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்- அண்ணாமலை

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்காகவும், நேர்மையான அரசியல்காகவும் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்காகவும், நேர்மையான அரசியல்காகவும் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி விவகாரங்கள் குறித்து கட்சியின் மேலியிட பொறுப்பாளர்கள் அறிவுரைப்படி நேரம் வரும்போது அதை பற்றி தெரிவிப்பேன். வெகு விரைவில் அதற்கான நேரம் வரும். தமிழகத்தில் தேர்தலை பணம் கொடுக்காமல் சந்திக்க முடியாது என்கிற நிலை தற்போது உள்ளது. வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஏற்புடையதல்ல என்பது என் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறேன். எவ்வித மாற்றுக் கருத்தும் அதில் இல்லை.

ஆனால் அரசியல் மாற்றம் என்பது நாம் தேர்தலில் இருக்கக்கூடிய யுக்திகள், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சந்திக்கின்ற போது நம் சுத்தமான அரசியலை செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு இவர்கள் சுத்தமான அரசியல் தர முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்க முடியும். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். நான் இரண்டு வருடங்களாக தமிழகத்துக்கு மாநிலத் தலைவராக இருந்து பட்டி தொட்டி முழுவதும் சென்று தமிழக அரசியலில் உற்று நோக்கி உள்ளேன். தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்திற்காகவும், நேர்மையான அரசியல் காகவும் தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் நான் உறுதியாக சொல்கிறேன். 
தமிழகத்தில் பணமில்லாமல் நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். அது இல்லாவிட்டால் தமிழகத்தில் மாற்றம் என்பது ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடக்காது. இது குறித்து கட்சிக்குள் நான் பேசி வருகிறேன். வரும் காலத்தில் இன்னும் ஆக்ரோஷமாகவும் பேசுவேன். தேர்தலை சந்திப்பது குறித்த என் நிலைப்பாட்டை கூறுகிறேன் அவ்வளவு தான். அதில் 50% நபர்களுக்கு உடன்பாடும் , 50% எதிர்கருத்தும் உள்ளது. ஆனால் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.

எந்தக் கட்சிக்கும், எந்த கட்சித் தலைவருக்கும் நான் எதிரி இல்லை. என்ன பொருத்தவரை தமிழகத்தில் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என வந்துள்ளேன். நான் தவறுகளை செய்ய தயாராக இல்லை. அதன் அடிப்படையில் சில வார்த்தைகளை நான் பேசியிருப்பேன். நான் காவல் அதிகாரியாக சிறுக, சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன்.
என்னை மாற்றிக் கொண்டுதான் நான் அரசியல் இருக்கணும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை. மற்ற கட்சிகளில் பணம் கொடுப்பது பற்றி நான் குறை கூறவில்லை. எனக்கு அந்த அதிகாரமும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துகள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது நல்லது தான்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரவேண்டும். நேர்மையான அரசியல் வர வேண்டும். அதற்கு 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அச்சரமாக இருக்க வேண்டும். மாநிலத் தலைவராக இருக்கும் நான் பொதுவாக சில கருத்துக்கள் சொல்ல வேண்டும். தலைவராக இருப்பதால் என்னால் என்ன செய்ய முடியும். என்னால் என்ன செய்ய
முடியாது என்ற மனப்பக்குவத்திற்கு நான் வந்து விட்டேன். நேரம் வரும்போது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும், கட்சியினுடைய கருத்தையும் மக்கள் மன்றத்தில் வைப்பேன் என்று அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.