சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடைக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சரின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்திற்கு பின்புறம் கடலுக்குள் 42 மீட்டர் உயரத்திற்கு பேனா நினைவிடம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், பேனா நினைவிடம் அமைக்க தடைக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.







