பெகாசஸ் வழக்கில் சம்பந்தபட்ட மனுதாரர்களின் கருத்தை விசாரித்த பின்பே உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை வந்தது.
அப்போது, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து விரிவாக விசாரிக்கப்படும் என மத்திய அரசு தரப்பு வாதிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதனை செய்வதற்கு தயாராக இல்லாததால், சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் கருத்தை விசாரித்து, அறிந்த பின்னர் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.







