திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்பி பவன் கே வர்மா திடீரென அறிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பவன் கே வர்மா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு இணைந்தார்.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனக்கு அளித்த வரவேற்புக்கும் காட்டிய அன்புக்கும் மிக்க நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது ராஜினமாவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள பவன் கே வர்மா, எப்போதும் தொடர்பில் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது விலகலுக்கான காரணம் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கட்சியின் மாவட்ட தலைவர் அனுப்ரதா மண்டல் ஆகியோர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பவன் கே வர்மாவின் விலகல் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், தீவிர பாஜக எதிர்ப்பாளரான பவன் கே வர்மா, பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதால் மீண்டும் அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகள் வலிமைபெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக கடந்த ஆண்டு பவன் கே வர்மா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









