பஞ்சாப் கலவரம்; முழு ஊரடங்கு அமல்

பஞ்சாப்பில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக நாளை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலின்…

பஞ்சாப்பில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக நாளை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலின் அருகே காலிஸ்தான் அமைப்பு மற்றும் சிவசேனா ஆகிய இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. தொடக்கத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு பிரிவினரும் கற்களை கொண்டு வீசியும், வாள்களை வைத்தும் தாக்கி கொண்டதால் இது பெரும் கலவரமாக மாறியது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://twitter.com/ANI/status/1519955380558000128

 

இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், பஞ்சாப்பில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வருத்தமளிப்பதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்ற இந்த கலவரத்தின் மூலம் மாநிலத்தின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாட்டியாலாவில் இன்று நடைபெற்ற கலவர காட்சிகளை பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கின்றன. பஞ்சாப் போன்ற முக்கியமான எல்லை மாநிலத்தில் அமைதியும் நல்லிணக்கமும் மிகவும் அவசியம். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய பஞ்சாப் அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.