இந்தியா எனது அன்பிற்குரிய நாடு; இந்தியாவுக்கு பேருதவி புரிந்த கம்மின்ஸ்

கொரோனா கோரப்பிடியில் இந்தியா சிக்கி தவித்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.…

கொரோனா கோரப்பிடியில் இந்தியா சிக்கி தவித்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்காக இரவு நேர ஊரடங்கை பல மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இதனால் மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ், இந்தியாவிற்கு உதவும்பொருட்டு பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா எனது அன்பிற்குரிய நாடு. நான் பார்த்ததிலேயே இங்குதான் மக்கள் பலரும் கனிவாகவும், அன்புடனும் நடந்து கொள்கின்றனர். தற்போது இங்கு பரவி வரும் கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாட்டில் நிலவும் இந்த துயரம் நிறைந்த இந்த சூழலை கருத்தில் கொண்டு பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு 37 லட்சம் வழங்குகிறேன். மேலும், ஐபில் தொடரில் கலந்து கொண்டுள்ள மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.