பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989 ஆம் ஆண்டு தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘தேனிசைத் தென்றல்’ என்று அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவ்வை சண்முகி காதல் கோட்டை மகா பிரபு எட்டுப்பட்டி ராசா உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். இந்த நிலையில் தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் அதிமுகவின்
மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா, நம் கட்சிக்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“தேனிசைத் தென்றல்” தேவா மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:
தமிழ்த் திரையுலகின் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த ‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது மறைவால் இசையுலகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது.
தனது தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனங்களில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற பாடல்களாலும் தமிழ் இசை உலகில் அழியாத தடம் பதித்தவர் தேவா அவர்கள். அவரது இசை, தலைமுறைகள் பல கடந்தும் நம் நினைவுகளிலும் இதயங்களிலும் உயிர்ப்புடன் வாழும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி:
“புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். எளிய பின்னணியிலிருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜா அவர்களும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தியவர்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு. ரஜினிகாந்த், கமலஹாசன், இன்றைய முதலமைச்சர் விஜய், அஜித் உள்ளிட்டோரின் இரசிகர்களால் கொண்டாடப்படும் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் தேவா. எளிய மக்களின் இசையான கானா இசையை திரையில் அறிமுகம் செய்தவரும் தேவா அவர்கள் தான்.
சில நாள்களுக்கு முன்பு வரை திரைப்படங்கள், தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவரது சகோதரர் சபேஷ் மறைந்தது அவரை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. மிகவும் நல்ல மனிதரான தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு பெரும் இழப்பு ஆகும்.
தேனிசைத் தென்றல் தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை:
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:
இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் தேவா. தனது இனிமையான மெட்டுக்களாலும், மண்ணின் மணம் மாறாத நாட்டுப்புற இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த மகத்தான இசை மேதை.
எனது அன்புக் கணவர், விஜயகாந்த் அவர்களுக்கும், இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பும் அன்பும் மிகவும் ஆழமானவை. திரையுலகில் இருவரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்களின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இன்றளவும் மக்களின் மனங்களில் குறிப்பாக, “வாராரு வாராரு அழகர் வாராரு” என்ற பாடல், ஆண்டுகள் பல கடந்தும் தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒலித்துக்கொண்டிருப்பது, தேவா அவர்களின் இசைக்கு காலத்தால் அழிவில்லை என்பதற்குச் சிறந்த சான்றாகும்.
விஜயகாந்த் திரைப் பயணத்தில் அவரது வீரத்தையும், மக்கள் மீதான அன்பையும், உணர்வுகளையும் இசையின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவாவின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. இசையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்டபோதும் எளிமையையும் பண்பையும் மனிதநேயத்தையும் கடைப்பிடித்தவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, இந்திய இசையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கேப்டன் அவர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத இசை நினைவுகளை உருவாக்கிய தேவா, இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய இசை என்றென்றும் நம்முடன் வாழும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்:
“தேனிசைத் தென்றல்” என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர் அண்ணன் தேவா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தொண்ணூறுகளின் தலைமுறையைத் தனது துள்ளலான கானா பாடல்களாலும், நெஞ்சை உருக்கும் மெல்லிசையாலும் கட்டிப்போட்ட மாபெரும் இசைக் கலைஞர் சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையிசையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், இசையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வ்ரு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




