முக்கியச் செய்திகள் தமிழகம்

நிறைவேறியது CUET-க்கு எதிரான தனித் தீர்மானம்

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என ஒன்றியு அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்கிடாது எனக்கூறிய அவர், பெரும்பாலான மாநிலங்களில், 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வைப் போன்றே இந்த நுழைவுத் தேர்வும் பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, நீண்ட காலக் கற்றல் முறைகளை குறைக்க வழிவகுக்கும் என குறிப்பிட்ட முதலமைச்சர், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் என கூறினார்.

இதேபோல, மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று பெருகும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வந்தால் இளைய சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும், மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் க்யூட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல, க்யூட் தேர்வு, பெயரில் வேண்டுமானால் க்யூட்டாக இருக்கலாம், ஆனால் இது க்யூட் தேர்வு கிடையாது என தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன் விமர்சித்தார். இதனை தொடர்ந்து பேசிய மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா, அப்துல் கலாம், அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் எந்த நீட் தேர்வையும், க்யூட் தேர்வையும் எழுதவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக, பாமக, இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு!

Vandhana

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

Saravana

உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது- ஜெர்மனி

G SaravanaKumar