பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள்

சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டின் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது. சீனா108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ…

சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டின் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது.

சீனா108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட ராக்கெட்டானது கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தியது. அதன்பின்னர் அது புவி வட்டபாதைக்குள் நுழைந்தது. ராக்கெட் அதன் பணிகளை முடித்து விட்டு ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. எனினும், இந்த ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை.

பொதுவாக, இதுபோன்ற ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும். எனினும், கடந்த காலத்தில் சீன ராக்கெட் குப்பைகளில் சில முழுவதும் எரியாமல், அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த முறை மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க கூடிய சாத்தியம் உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ராக்கெட்டானது, வளிமண்டலத்தில் நுழைந்து தெற்கு-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளது என யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது. ராக்கெட்டின் வடிவமைப்பின்படி, பூமியின் எந்த பகுதியில் விழவேண்டும் என்ற வழிகாட்டி அமைப்போ அல்லது மக்களிடம் இருந்து தொலைவில் விழுவதற்கான அமைப்போ அதில் இடம் பெறவில்லை.

சீன ராக்கெட் பூமியில் இதுபோன்று விழுவது நான்காவது முறையாகும். கடந்த 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் என மூன்று முறை சீனாவின் ராக்கெட்டுகள் இதுபோன்று பூமியில் விழுந்துள்ளன. ஒவ்வொரு முறையும், ராக்கெட் பாகங்களால் தரையில் உள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என சீனா தொடர்ந்து கூறி வந்தது. எனினும், நேற்றைய தினம் ஸ்பெயின் நாட்டின் விமான நிலையம் ஒன்று மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் நேற்று காலை காலதாமதமுடன் இயக்கப்பட்டன. இதேபோன்று மற்றொரு ராக்கெட்டை, வருகிற 2023-ம் ஆண்டில் சீனா மீண்டுமொரு முறை பயன்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.