சட்டவிரோதமாக சேர்க்கும் பணத்தை பதுக்கும் இடமாக தனது வீட்டை கட்டாயப்படுத்தி பயன்படுத்திக் கொண்டதாக பார்த்தா சாட்டர்ஜி மீது அர்பிதா குற்றம் சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, அது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்பட பல அமைச்சர்களின் வீடுகளிலும், பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் இருந்து மிகப் பெரிய குவியலாக சுமார் ரூ. 50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டனர்.
அர்பிதா முகர்ஜியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பார்த்தா சாட்டர்ஜி குறித்த பல்வேறு உண்மைகளை அவர் தெரிவித்திருக்கிறார்.
பார்த்தா சாட்டர்ஜி தனது வீட்டிற்கு வரும்போதெல்லாம், சில நபர்களை ரகசியமாக சந்திப்பது வழக்கம் என்றும் அத்தகைய நேரங்களில் அவர் அறையின் கதவை மூடிக்கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக அவர் ஈட்டும் பணத்தை பதுக்கும் இடமாக தனது வீட்டை கட்டாயப்படுத்தி பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அர்பிதா முகர்ஜி, எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் பார்க்க அனுமதிக்க மாட்டார் என கூறியுள்ளார்.