பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த மாதம் முதல் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சு வார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தேர்தல் வாக்குறுதி எண் 181-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதே பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது. முதலமைச்சர் அவ்வப்போது பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்தின் நிலை குறித்து விசாரித்து, அது குறித்த தகவல்களைப் பெற்று வருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நேரத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்சினை எழுந்தபோது, ​​பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடியை விடுவிக்கவில்லை. எனது பதவிக் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு உண்மையாகவே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளில் அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கான ஊதியம் மேலும் ரூ. 2,500 உயர்த்தப்படுகிறது. அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம்; உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மே மாதம் முதல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும். பணி நிரந்தரம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும்”
என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.