கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி சசி தரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் ஜூன் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தித் தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராகி இதுதொடர்பாக கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர். இதற்கு முன்பாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக்குழு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆஜராகி கருத்துக்களைத் தெரிவித்தனர். அப்போது, ட்விட்டர் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
முன்னதாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்பத்தில் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) புதிய விதியைக் கொண்டு வந்தது. இந்த விதிகள் மே 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. இந்த விதிகளை கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்த நிலையில், ட்விட்டர் மட்டும் மறுத்துவந்தது. இதனை முன்வைத்து மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கிடையே மோதல் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.







