நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முந்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 6 முறை ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி நாடாளு மன்றம் நோட்டி பேரணி சென்ற மாணவர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினட்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகம் முன்பு போராடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இந்த நிலையில் மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது மாண்வரகள் மீதான தாக்குதலை கண்டித்தும், ராகுல்காந்தி செய்யப்பட்டதை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் 12 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது,
காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய கே.சி.வேணுகோபால், “மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசு கடுமையாக ஒடுக்கியது. இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க அரசு முதல் நாளிலிருந்தே முழுமையாக தயாராக உள்ளது. ஆனால், எந்த விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும், எப்போது நடத்த வேண்டும், எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சிகளின் தரைத் தலைவர்களுடன் ஆலோசித்து சபாநாயகர் முடிவு எடுப்பார்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அர்த்தமுள்ள விவாதம் நடைபெற வேண்டும் என்பதே அரசின் விருப்பம்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ நாங்கள் இங்கு எழுப்பக்கூடிய விவகாரம் காங்கிரஸ் கட்சி, பாஜக, சமாஜ்வாதி கட்சி, தொடர்புடையது கிடையாது, மாறாக இது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது
நீட் விவகாரத்தில், போராட்டம் நடத்திய மாணவர்களின் ஆடைகளை கிழித்து அவர்களை கொடூரமாக தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்.
ஆனால் அனைத்தையும் செய்துவிட்டு இப்போது வந்து வாருங்கள் விவாதம் நடத்துவோம் என கூறுகிறீர்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று பேசினார்.
இதனையடுத்து பேசிய சபாநாயகர் ஓம்.பிர்லா, “மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறது என சொல்லிவிட்டது எனவே எதிர்கட்சிகள் அவர்களது இடங்களில் அமைதியாக உட்கார்ந்து விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்” என கோரிக்கை விடுத்தார்
ஆனால் எதிர்கட்சிகள் தொடர் முழக்கங்கம் எழுப்பியதால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.




